மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம்


மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில்அறுவடை செய்யப்பட்ட வயலில் மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம் அடைந்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில்அறுவடை செய்யப்பட்ட வயலில் மழைநீர் தேங்கியதால் வைக்கோல் நனைந்து சேதம் அடைந்ததால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகள் வளர்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும்.

அவைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமல்லாமல் உலர் தீவனமும் கொடுக்க வேண்டி உள்ளது.. இதற்காகவே அறுவடை செய்யும் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வாங்கியும், தங்களின் வயலில் கிடைப்பதை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்துவார்கள்.

அறுவடை பணிகள் பாதிப்பு

தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் வைக்கோல்களை வெளியில் இருந்து தான் வாங்கி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலை சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. அதன்பின்னர் மேக மூட்டதுடன் காணப்பட்டது.

வைக்கோல் நனைந்து சேதம்

அடிக்கடி இதமான வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கிய வைக்கோல் கட்டுகள் மழையில் நனைந்து வீணாகி விட்டது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடை பணி நடந்துவந்தது. இந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்கள் தேங்கி கிடக்கின்றன. அதுவும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.

ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை

திருச்சி, கரூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து தான் கால்நடை தீவனத்திற்கு வைக்கோல் அனுப்பி வைக்கப்படும். தற்போது வைக்கோல்கள் நனைந்து விட்டதால் அவற்றை சேமித்து வைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 40 முதல் 50 வைக்கோல் கட்டுகள் வரை கிடைக்கும். வியாபாரிகள் எந்திரத்தை கொண்டு வந்து வைக்கோல் கட்டி எடுத்து சென்றால் 1 கட்டு ரூ.80-க்கு விற்பனையாகும்.

தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அதே போல் விவசாயிகளே எந்திரம் மூலம் வைக்கோல் கட்டி விற்பனை செய்தால் 1 கட்டுக்கு ரூ.100-க்கு விற்பனையாகும். தற்போது மழையில் நனைந்துள்ளதால் வைக்கோலில் தரம் குறைந்து விடும். இதனால் அதன் விலையும் குறையும். மழையால் விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய உபரி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story