நீடாமங்கலம், வலங்கைமான் பகுதி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கலை விழா போட்டிகள்
வட்டார அளவில் இரண்டாம் நாளாக நீடாமங்கலத்தில் நேற்று கலைத்திருவிழாப் போட்டிகள் நடைபெற்றன.
வட்டார அளவில் இரண்டாம் நாளாக நீடாமங்கலத்தில் நேற்று கலைத்திருவிழாப் போட்டிகள் நடைபெற்றன.
கலை போட்டிகள்
நீடாமங்கலம் பகுதியில் பள்ளி அளவில் நடந்த கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 1,100 மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் நீடாமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக நடந்தது. தனி நபர் நடனம், குழு நடனம், கிராமிய இசை, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, வில்லுப்பாட்டு, நாடகம், பல குரல் போட்டி, களிமண்ணில் உருவங்கள் செய்தல், கையெழுத்துப் போட்டி என பல்வேறு தலைப்புகளில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
இதில் முதல் 2 இடங்களில் தேர்வு பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத், முத்தமிழன் வட்டார வளமைய பயிற்றுனர் சத்யா கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்புராணி உள்ளிட்ட ஆசிரியப் பயிற்றுனர்கள், போட்டி நடுவர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அளவிலான, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9, 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெறும் மாணவா்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
27 பள்ளிகளில்...
வலங்கைமான் ஒன்றிய அளவில் 27 அரசு மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போட்டிகள் நடந்தன. நேற்று வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த கலை திருவிழா போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆசிரியர், ஆசிரியைகள் நடுவர்களாக இருந்து மாணவர்களை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தெய்வ பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.