இலந்தை பழம் சீசன் தொடங்கியது
நாகை மாவட்டத்தில் இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளதால் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் இலந்தை பழம் சீசன் தொடங்கியுள்ளதால் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலந்தை பழம் சீசன்
நாகை மாவட்டத்தில் வடக்கு பொய்கைநல்லூர், தெற்குபொய்கை நல்லூர், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நாட்டு இலந்தை மரங்கள் உள்ளன. இங்கிருந்து இலந்தை பழம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இங்கு விளையும் இலந்தை பழங்களுக்கு தனி மவுசு உண்டு.
தற்போது சீசன் தொடங்கி விட்டதால் மரங்களில் இலந்தை பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை விற்பனைக்காக சேகரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.
அதிக ஊட்டச்சத்து கொண்டது
அதிக ஊட்டச்சத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும்.இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பழத்தில் கொட்டையுடன் கூடிய சதை பகுதி மிகவும் சுவை மிகுந்தது. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
விளைச்சல் அதிகரிப்பு
இதுகுறித்து தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த விவசாயிகள் கூறிகையில்,நாகை மாவட்டத்தில் இலந்தை பழத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளது. எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான இலந்தை மரங்கள் உள்ளன ஜனவரி மாதம் தொடங்கி 3 மாதங்கள் சீசன் காலமாகும். தற்போது மரத்தில் பழங்கள் காய்த்து தொங்கி கொண்டிருக்கிறது. நீண்ட கொக்கிகளை கொண்டு மரத்தின்கிளைகளை உலுக்கி, கீழே விழும் பழங்களை சேகரித்து மொத்தமாக அருகில் உள்ள பரவை சந்தையில் விற்பனை செய்து வருகிறோம்.
ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை
ஒரு கிலோ இலந்தை பழம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீசன் இல்லாத போது ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இங்கிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இலந்தை மரத்தின் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. இந்த பழத்தில் பல்வேறு வகையான வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரத சத்தும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
ரத்த ஓட்டம் சீராகும்
இந்த பலத்தை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன், குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது. பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது என்றனர்.ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு பயன்படுத்தினால் உடலுக்கு நன்மை பயக்கும். சீசன் தொடங்கி விட்டதால், நாகை நகர் பகுதி சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள இலந்தை பழங்களின் மருத்துவ குணம் அறிந்தவர்கள் கண்டதும் வாங்கி செல்கின்றனர்.