அதிக பாரம் ஆபத்தான பயணம்
மடத்துக்குளம் அருகே கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதுடன் அதிலேயே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
மடத்துக்குளம் அருகே கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவதுடன் அதிலேயே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
அதிக பாரம்
சரக்கு வாகனங்களில் முன்புறம் உள்ள கேபின் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதியில்லை. ஆனால் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலி வேலைக்கு செல்பவர்கள் முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் வரை சரக்கு வாகனங்களையே போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர். சரக்கு வாகனங்களில் அதிக உயரம் மற்றும் அதிக எடை கொண்ட பாரங்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய விளைபொருட்கள் அறுவடையின் போது கிடைக்கும் உப பொருட்களான தென்னை மட்டை, தேங்காய் உரி மட்டை, வைக்கோல், சோளத்தட்டை போன்ற பொருட்களை வாகனங்களில் ஏற்றி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லும்போது செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அதிக உயரம் மற்றும் அகலத்தில் பாரம் ஏற்றுகின்றனர். இவ்வாறு கொண்டு செல்லும் பொருட்கள் மின் கம்பிகளில் உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் குறுகலான சாலைகளில் செல்லும் போது போக்குவரத்துக்கு மிகப்பெரிய இடையூறாக மாறி விடுகிறது.
விபத்து அபாயம்
மண், ஜல்லி, செங்கல், எம்.சாண்ட் மற்றும் கற்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வாகனங்களில் ஏற்றிச்செல்கின்றனர். இதனால் சாலைகள் விரைவாக சேதமடைவதுடன், விபத்துகளின் போது அதிக அளவில் இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இவ்வாறு சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் கூலித்தொழிலாளர்களை சரக்குக்கு மேலே ஆபத்தான முறையில் அமர வைத்து அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் சில நேரங்களில் தூங்கிக்கொண்டும், செல்போன்களை பார்த்துக்கொண்டும் எந்த வித பிடிமானமும் இல்லாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இதனால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுவது மற்றும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.