ஆபத்தான பாலம்... அச்சத்துடன் கடக்கும் பொதுமக்கள்...


ஆபத்தான பாலம்... அச்சத்துடன் கடக்கும் பொதுமக்கள்...
x
தினத்தந்தி 6 Aug 2023 4:00 AM IST (Updated: 6 Aug 2023 4:01 AM IST)
t-max-icont-min-icon

பாலம்... இது ஆறுகள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை கடந்து செல்லும் இடங்களில் அமைக்கப்படுகிறது. இங்கு ஒரு இடத்தில் பாலம் இடிந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தினமும் சென்று வருகிறார்கள்.

நீலகிரி

பாலம்... இது ஆறுகள், நீரோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை கடந்து செல்லும் இடங்களில் அமைக்கப்படுகிறது. இங்கு ஒரு இடத்தில் பாலம் இடிந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தினமும் சென்று வருகிறார்கள்.

நீரோடையின் குறுக்கே பாலம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் குடியிருப்புக்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே நீரோடை செல்கிறது. அங்கு பாலம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மரப்பாலம் அமைத்து நடந்து சென்று வந்தனர். இதனால் நீரோடையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. தற்போது பாலம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து காணப்படுகிறது. இதனால் பாலத்தில் அச்சத்துடன் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தவறி நீரோடைக்குள் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை பெண் ஒருவரை தாக்கி கொன்றது. பாலத்தின் தற்போதைய நிலையால், யானை துரத்தினால் கூட ஓட முடியாத நிலை உள்ளது. இதற்கிைடயே பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் நடைபாதை துண்டிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சப்பந்தோடு பகுதியில் பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்து உள்ளது.

மழைக்காலங்களில் நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து உள்ளது. மேலும் பாலம் அந்தரத்தில் தொங்குவது போல் காணப்படுகிறது. இதனால் பாலம் இடிந்தால் கிராமத்திற்கு செல்லும் நடைபாதை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. பழுதடைந்த பாலம், நடைபாதையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story