பஸ் நிலையத்தில் ஆபத்தான குழி சீரமைப்பு


பஸ் நிலையத்தில் ஆபத்தான குழி சீரமைப்பு
x

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான குழி ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான குழி 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.

குழி சீரமைப்பு

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, சென்னை, பெங்களூரு, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதை தவிர சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கிடையில் பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் வெளியே வரும் இடத்தில் மழைநீர் தேங்கியதால், குழியாக மாறியது.

இந்த குழியில் பஸ்சின் சக்கரங்கள் இறங்கி ஏறும் போது, பின் பகுதி தரையில் அடித்தப்படி சென்றதால் பஸ்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டது. மேலும் பயணிகளும் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்த ஆபத்தான குழியை அதிகாரிகள் சீரமைத்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

தேங்கும் மழைநீர்

பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் வெளியே வரும் இடத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் சாலை பழுதடைந்து ஆபத்தான குழியாக மாறியது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானதை தொடர்ந்து அந்த குழி சீரமைக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது. ஆனால் அதே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து மழைநீர் வெளியேறும் பகுதியில் மண் கிடக்கிறது.

இதனால் மீண்டும் அதே இடத்தில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழைநீர் தேங்கினால் மீண்டும் குழி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Related Tags :
Next Story