கம்பம்-கூடலூர் சாலையில் காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான பயணம்
கம்பம்-கூடலூர் சாலையில் காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரம், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி சுற்றுலா தலமான சுருளி அருவி, கேரள மாநிலத்தில் உள்ள தேக்கடி, வாகமன், பருந்துப்பாறை, இடுக்கி அணை, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் கம்பத்தின் அருகில் உள்ளன. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கம்பம் நகர் வழியாக வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் சுருளி அருவிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் கம்பம், கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்பவர்கள் கார் மற்றும் பஸ்களில் செல்கின்றனர். இதில் சுற்றுலா வரும் சிலர் தங்களது உற்சாக மிகுதியால் காரின் மேற்கூரையை திறந்துவிட்டு, அதில் அமர்ந்தபடி பயணம் செய்கின்றனர். மேலும் சிலர் சிறுவர்களுடன் நின்றவாறு கைகளை தட்டியும், கூச்சலிட்டும் செல்கின்றனர்.
ஏற்கனவே கம்பம்-கூடலூர் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.