ஆடி அமாவாசையையொட்டி குண்டாற்றில் தர்ப்பணம்
திருச்சுழியில் ஆடி அமாவாசையையொட்டி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழியில் ஆடி அமாவாசையையொட்டி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசை
திருச்சுழியில் உள்ள குண்டாற்றில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் ராமேசுவரம், கங்கை, காசி உள்ளிட்ட புண்ணிய தலங்களில் கொடுத்த பலனை அடையலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆதலால் நேற்று ஆடி அமாவாசையையொட்டி திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பேர் குவிந்தனர்.
புனித நீராடல்
போதிய அளவு மழை இல்லாததால் குண்டாற்றில் தண்ணீர் வரத்து இல்லை. அதனால் இங்கு தனி நபர் மூலம் 2 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து துணைமாலையம்மன், திருமேனிநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தடுப்புகள் அமைத்து வரிசையாக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குகனேஸ்வரன் செய்திருந்தார்.