மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

ஆடி அமாவாசையையொட்டி மோகனூர் காவிரி ஆற்றில் திரண்ட பக்தர்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

நாமக்கல்

மோகனூர்

ஆடி அமாவாசை

இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி புனிதநீர் நிலைகளுக்கு சென்று நீராடி, அவர்களுக்கு பிடித்தமான உணவு பொருட்களை வைத்து படையலிட்டு, எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்நாளில், முன்னோர்களை நினைத்து வணங்கி, அவர்களுக்கு திதி கொடுக்கலாம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

தர்ப்பணம்

அதன்படி ஆடி அமாவாசையையொட்டி நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் அதிகாலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். பின்னர் எள், பச்சரிசி, தர்ப்பப்பை, பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்களை அவர்கள் காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

இதில் நாமக்கல், வளையப்பட்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு சென்றனர்.


Next Story