ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசை
ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று நீர்நிலைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
ஆடி அமாவாசையையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமானவர்கள் கூடினர். பின்னர் அவர்கள் கோவில் அருகே உள்ள மண்டபத்துக்கு சென்று வரிசையாக தரையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி, பூ, தேங்காய், பழம், எள்ளு, பூசணிக்காய், அகத்தி கீரை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை படையலிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கன்னங்குறிச்சி ஏரி
ஒரு சிலர் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து கொண்டு வந்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அர்ச்சகர்கள் மந்திரம் கூறினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். பின்னர் எள், சாதத்தால் கலந்த உணவை காகங்களுக்கு வைத்து வழிபட்டனர்.
இதேபோல் கன்னங்குறிச்சி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் காலையிலேயே திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு நீராடிவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் படைத்த எள் உள்ளிட்ட பொருட்களை ஏரிகளில் கரைத்தனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.