ஜமாபந்தியில் தாசில்தார்கள் மோதல்

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் தாசில்தார்கள் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் தாசில்தார்கள் ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜமாபந்தி
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் 3-வதுநாளாக நேற்று ஜமாபந்தி நடந்தது. பள்ளிகொண்டா உள்வட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டா மாற்றம், பட்டா நகல், அரசு நலத்திட்டங்களுக்கு உதவி கோருதல் மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் கொடுத்தனர். மாவட்ட முத்திரைக் கட்டண தனித்துணை கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
வருவாய் தீர்வாய மேலாளர் பாலமுருகன், அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார்கள் திரு குமரேசன், ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் பழனி, தலைமை நில அளவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் ஆகியோர் வரவேற்றனர்.
தாசில்தார்கள் மோதல்
பள்ளிகொண்டா உள் வட்டத்தில் உள்ள 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டா மாற்றம், நிலத்தை அளவீடு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனுக்களை வழங்க வரிசையில் நின்றிருந்தனர். அப்போது மனுக்களை பெறுவதற்காக அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார் மனுதாரர்களை அழைத்தார். அப்போது வெளியில் இருந்துவந்த தாசில்தார் விநாயகமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை பார்த்து மனுக்களை பெற உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று வாடா போடா என்று ஒருமையில் பேசினார்.
பதிலுக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜமாபந்தி அலுவலர் முன்பாக என்னை தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம் வெளியிலிருக்கும் மனுதாரரை உள்ளே அழைத்தது என்ன தவறு என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜமாபந்தி அலுவலர் ராமகிருஷ்ணன் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதனை அடுத்து மனுதாரர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று மனுக்களை கொடுத்தனர்.