மருமகள் காயம் அடைந்த அதிர்ச்சியில் மாமியார் சாவு


மருமகள் காயம் அடைந்த அதிர்ச்சியில் மாமியார் சாவு
x

குடியாத்தத்தில் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த மருமகளை பார்க்க சென்றபோது கதறி துடித்த மாமியார் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தத்தில் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த மருமகளை பார்க்க சென்றபோது கதறி துடித்த மாமியார் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மாமியார்-மருமகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (வயது 70). இவரது கணவர் சின்னையன் ஏற்கனவே இறந்து விட்டார்.

இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் ராமச்சந்திரனுக்கு சரிதா (35) என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சரிதாவிடம் மாமியார் கண்ணம்மாள் அவரது தாயாரை விட பரிவு காட்டி அரவணைத்து வந்தார். மருமகள் கஷ்டப்பட்டு வீட்டு வேலையை பார்க்கக்கூடாது என கருதும் அவர் தானே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்வார்.

விபத்தில் காயம்

நேற்று முன்தினம் இரவு வீட்டில் கட்டிய பூக்்களை சரிதா எடுத்துக்கொண்டு பழகியவர்களிடம் வழங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள நான்குமுனை ரோடு சந்திப்பு பகுதி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சரிதா மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாமியார் கண்ணம்மாளுக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சியுடன் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருமகள் சரிதாவை பார்த்ததும் கதறி அழுது துடித்துள்ளார். அப்போது அழுதபடியே அதிர்ச்சியில் மயங்கி சரிந்தார். உடனே அங்கிருந்தவர்கள் டாக்டர்களிடம் கூறினர். டாக்டர்கள் பரிசோதித்தபோது கண்ணம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

நேற்று காலை கண்ணம்மாளின் உடலுக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர்ரவி, நகரமன்ற உறுப்பினர் நளினிதமிழரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மருமகள் காயம் அடைந்து சிகிச்சை பெறுவதை அறிந்து கதறி துடித்த மாமியார் கண்ணம்மாள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story