விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை


நாகை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. நாகூரில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. நாகூரில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

விடிய, விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நவம்பர் 1-ந் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு முதலே நாகையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய,விடிய பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழையின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.நேற்று காலை நேரத்தில் பெய்த மழையால் அலுவலக வேலைக்காக செல்லும் ஊழியர்களும், கூலி தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகை நாகூர் மெயின் ரோடு, வ.உ.சி.சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நீலா மேலவீதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீர் தெரியாததால் வாகன ஓட்டிகள் தடுமாறி சிரமத்துடன் சென்றனர்.

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது

மீனம்பநல்லூர், மேலவாழக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் ெநல்மணிகள் நனைந்து வீணாக வாய்ப்பு உள்ளது. எனவே தற்காலிக கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்தது.

இந்த மழையால் சாலையோரத்தில் காய்கறி கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர். மழையின் காரணமாக நாகூர் மியான் தெருவில் உள்ள நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளியின் சுற்றுசுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருமருகல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் திட்டச்சேரி, திருமருகல், அம்பல், கொங்கராயநல்லூர், ஏனங்குடி, திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கியது.

வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இதன்காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.


Next Story