தியாகதுருகம் புக்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தியாகதுருகம் புக்குளம் ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்டது புக்குளம் பகுதி. இங்கு ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் வெட்டப்பட்டுள்ள குட்டையில், தியாகதுருகம் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி வருகிறது. இந்த குட்டை நிரம்பி, ஏரியில் உள்ள தண்ணீருடன் கலந்து வருவதால், நிறம் மாறி, கழிவு நீர் ஏரியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஏரியில் அதிகளவில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதேநேரத்தில், அங்கு மேய்ச்சலுக்காக ஓட்டி வரும் கால்நடைகளும், ஏரியில் கலந்துள்ள கழிவுநீரையே குடிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று, மீன்கள் இறப்புக்கான காரணத்தை ஆராய்வதுடன், கழிவுநீர் கலக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.