பெரும்பாலை அருகேமுயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி சாவுநண்பர் உள்பட 2 பேர் கைது
ஏரியூர்:
பெரும்பாலை அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். இதுதொடர்பாக நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி சாவு
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்வீரன்( வயது 52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியுடன் புதுப்பட்டி வனப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றனர். அப்போது நரசிபுரம் காவிரியப்பன் நிலத்திற்குள் சென்ற போது, நிலங்களை சுற்றிலும் காட்டுப்பன்றிக்காக போட்டு இருந்த மின்கம்பியை தமிழ் வீரன் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
2 பேர் கைது
இதுகுறித்து பெரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்வீரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவிரியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். முயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.