எடப்பாடி அருகேதந்தையுடன் மீன் பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி சாவு
எடப்பாடி
எடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி பலியானான்.
மீன்பிடிக்க சென்ற...
எடப்பாடி நகராட்சி ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). இவருடைய மனைவி லட்சுமி (50). இவர்களுக்கு தனம் (18) என்ற மகளும், நந்தீஸ்வரன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தீஸ்வரன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.
இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன் மற்றும் தனது மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன், எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அங்கு ஏரிக்கரையில் மகனை அமர வைத்த கோவிந்தன், தனது நண்பர் சித்தையனுடன் சேர்ந்து ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கரைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கே மகனை காணாமல் திடுக்கிட்ட கோவிந்தன் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தேடினார்.
உடல் மீட்பு
ஆனாலும் மகன் கிடைக்காத நிலையில், இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து செய்த எடப்பாடி போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை ஏரி பகுதியில் தேடினர்.
அவர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவனின் உடலை நேற்று தேடி கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.