சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு


சங்ககிரி அருகேநின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் டிரைவரும் சாவுபலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு
x

சங்ககிரி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

சேலம்

சங்ககிரி

சங்ககிரி அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கார் டிரைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

மாநகராட்சி டிரைவர்

சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28), இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு பிரியாவுக்கும், கணவர் ராஜதுரைக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இது குறித்து ராஜதுரை, குட்டப்பாளையத்தில் வசித்த தனது மாமனார் பழனிசாமி, மாமியார் பாப்பாத்தி ஆகியோரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

6 பேர் பலி

இதையடுத்து மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவே ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தனர். காரை விக்னேஷ் ஓட்டினார்.

கொண்டலாம்பட்டியில், மகளையும் மருமகனையும் சமாதானம் செய்து வைத்து விட்டு மீண்டும் நள்ளிரவு 1.30 மணியளவில் ஆம்னிகாரில் அவர்கள் புறப்பட்டனர். அவர்களுடன் மகள் பிரியா, குழந்தை சஞ்சனாவும் சென்றனர். சங்ககிரி அருகே சின்னா கவுண்டனூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் சென்ற போது, சாலையின் இடது புறம் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரியா, டிரைவர் விக்னேஷ் ஆகிய இருவர் தவிா்த்து மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் ஒருவர் சாவு

இந்த விபத்தில் காயம் அடைந்த ஆம்னி கார் டிரைவர் விக்னேஷ், பிரியா ஆகிய 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. பிரியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் ஏற்கனவே பலியான ஆறுமுகம்-மஞ்சுளா தம்பதியின் ஒரே மகன் விக்னேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story