கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி-கணவர் கண் முன்னே பரிதாபம்
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக இறந்தார்.
ஓய்வு பெற்ற வன ஊழியர்
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தசரதராம் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 68). ஓய்வு பெற்ற வன ஊழியர். இவருடைய மனைவி கஸ்தூரி (62). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரியில் இருந்து கந்திகுப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கந்திகுப்பம் அருகே உள்ள ஒரப்பம் பகுதியில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் கேசவன், கஸ்தூரி ஆகியோர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
சிறிது நேரத்தில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே, தனது கணவர் கேசவன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த நபர், அதை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த கேசவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கஸ்தூரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவர் கண் முன்னே பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.