கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சாவு


கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சாவு
x

ராசிபுரம் அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்

ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகே உள்ள வேம்பாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் காங்கமுத்து (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் ஓய்வு நேரங்களில் கால்நடைகளுக்கு ஊசி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அவருக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் திம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவரது நண்பரான ஓமியோபதி டாக்டரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது ஓமியோபதி கிளினிக்கு சென்ற காங்கமுத்துவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

திடீரென சாவு

அப்போது அங்கு காங்கமுத்துவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காங்கமுத்துவை சேர்த்தனர். அங்கும் அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது பற்றி காங்கமுத்துவின் அண்ணன் முனியன் மங்களபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் காங்கமுத்து எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த காங்கமுத்துவுக்கு மஞ்சு (25) என்ற மனைவியும், கவிநிலா (4) என்ற மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story