ஓடும் பஸ்சில் இருந்து அவசர கதவு வழியாக குதித்தவர் சாவு
தேவகோட்டை அருகே ஓடும் பஸ்சில் இருந்து அவசர கதவை திறந்து வெளியே குதித்தவர் உயிரிழந்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே ஓடும் பஸ்சில் இருந்து அவசர கதவை திறந்து வெளியே குதித்தவர் உயிரிழந்தார்.
வெளியே குதித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தெற்குதெரு பால் அபிஷேகம் என்பவருடைய மகன் முருகவேல் (வயது 35). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முருகவேல் தொண்டியில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ்சை விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் செல்லப்பாண்டி (30) ஓட்டினார்.
பஸ் தொண்டி-மதுரை சாலையில் தேவகோட்டை அருகே கற்களத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென முருகவேல் பஸ்சில் இருந்த அவசர கதவை திறந்து வெளியே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதிபரபரப்பாக காணப்பட்டது.