மதுபோதையில் நீந்தி சென்ற போது பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் மூழ்கி தொழிலாளி சாவு
பாலக்கோடு:
மதுபோதையில் நீந்தி சென்றபோது பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் மூழ்கி கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வெல்டிங் தொழிலாளி
கர்நாடகா மாநிலம் ஒங்கசந்திரா பகுதியை சேர்ந்தவர் கிரண் (வயது32). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை சுற்றி பார்க்க சென்றார். அங்கு நண்பர்கள் மது அருந்தினர். பின்னர் நண்பர்கள் அனைவரும் சின்னாறு அணையில் குளிக்க சென்றனர். மது போதையில் அணையின் ஆழமான பகுதிக்கு கிரண் நீந்தி சென்றார். அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார். இதைகண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கிரண் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் மீட்பு
இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து சென்று கிரணின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.