நல்லம்பள்ளி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் கார் மோதி சாவு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே லாரியில் இருந்து தவறி சாலையில் விழுந்த டிரைவர் மீது கார் மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கார் மோதியது
சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து புனேவிற்கு இரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை தர்மபுரி மாவட்டம் இருசன்கொட்டாய் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (வயது 38) ஓட்டி வந்தார். இவருடன் மாற்று டிரைவராக கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த குருசாமி (42) உடன் வந்தார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக வந்தது. அப்போது லாரியில் வந்த மாற்று டிரைவர் குருசாமி நிலைதடுமாறி தவறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
டிரைவர் சாவு
இந்த விபத்தில் குருசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், விரைந்து வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.