தர்மபுரியில் மாடியில் இருந்து தவறி விழுந்து லாரி மெக்கானிக் பலி
தர்மபுரி கோட்டை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 55). லாரி மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள லாரி உரிமையாளரின் வீட்டில் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது 3-வது மாடியில் மரத்தின் கிளைகளை சீர்படுத்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஜாகீர் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.