செல்போன் திருட்டு வழக்கில் கைதான தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


செல்போன் திருட்டு வழக்கில் கைதான தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
x

செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை திரு.வி.க.நகர், நீலம் தோட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). ரவுடியாக வலம் வந்த இவர், பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 20-ம் தேதி காலை திருப்போரூரில் இருந்து கிண்டி செல்லும் மாநகர பஸ் துரைப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் கிளாடியா (21) என்பவரிடம் தினேஷ்குமார் தனது கூட்டாளி ராமச்சந்திரனுடன் சேர்ந்து செல்போனை திருடினர்.

அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், தினேஷ்குமாரை மடக்கிப்பிடித்தனர். அவரது கூட்டாளி ராமச்சந்திரன் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட தினேஷ்குமாரை பொதுமக்கள் துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

துரைப்பாக்கம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ராஜாமணி, தலைமை காவலர் பார்த்தசாரதி ஆகியோர் பிடிபட்ட தினேஷ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது வாலிபரிடம் பறித்த செல்போன், கூட்டாளி ராமச்சந்திரனிடம் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், தினேஷ்குமாரிடம் அவருடைய மனைவி கவுசல்யாவை தொடர்பு கொண்டு பேச வைத்தனர். அப்போது தினேஷ்குமார், பஸ்சில் பயணியிடம் பறித்த செல்போனை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே நிற்கும் ராமச்சந்திரனிடம் இருப்பதாகவும், அதை வாங்கி வந்து கொடுக்கும்படியும் கூறினார்.

அதன்படி கவுசல்யாவும், தினேஷ்குமாரின் தாய் லதாவும் ஆட்டோவில் அங்கு சென்று ராமச்சந்திரனிடம் செல்போனை வாங்கி துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த தினேஷ்குமார் சோர்வாக இருப்பதாக கூறினார். அவருக்கு மாதுளம் பழம் ஜூஸ் கொடுத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் 2 தோசை சாப்பிட்ட தினேஷ்குமார் இரவு 10 மணி அளவில் கழிவறைக்கு சென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார், ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செந்தில்குமார், திரு.வி.க. நகர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "செல்போன் திருடிய வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற துரைப்பாக்கம் போலீசார், தினேஷ்குமாரை துன்புறுத்தியதால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறி இருந்தார்.

அதன்பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து எழும்பூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெகதீசன், தினேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

இந்தி நிலையில் செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பெண் ஆய்வாளர் உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2 தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story