தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு


தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் சாவு
x

பெரம்பலூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

குறைவான நாடி துடிப்பு

தர்மபுரியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரவிந்த்(வயது 21). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அவர் தன்னுடன் பயிலும் 2 நண்பர்களுடன் பெரம்பலூர் ரோஜா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்கசென்ற அரவிந்த், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லையாம். இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அரவிந்தை எழுப்பியுள்ளனர். அப்போது அரவிந்துக்கு நாடி துடிப்பு குறைவாக இருந்ததால், அவர்கள் அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அரவிந்த் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்றனர்.

மூச்சு திணறல்

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த அரவிந்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதாம். அப்போது அவருடன் தூங்கிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் அரவிந்தை எழுப்பி கேட்டதற்கு, அதற்கு அவர் தனக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் காலையில் மயக்க நிலையில் எழுந்திருக்காமல் இருந்துள்ளார். நாடி துடிப்பு குறைந்து அரவிந்த் உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பல்வேறு கோணங்களில் விசாரணை

மேலும் அரவிந்த் கடந்த மாதம் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவருடன் இரவில் வல்லாபுரம் அருகே சென்றபோது, மர்மகும்பல் அரவிந்திடம் செல்போனையும், அந்த மாணவியிடம் 1½ பவுன் நகையையும், செல்போனையும் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது அரவிந்த் இறந்ததற்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரவிந்த் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அரவிந்தின் உடலை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அக்கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story