எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98). வயது முதிர்வால் சென்னையில் இன்று காலமானார். பசுமை புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவருடன் நான் கழித்த தருணங்களை நான் எப்போதும் ரசிப்பேன். சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்; பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர்.

கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கியவர்; எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் உலக அறிவியல் சமூகத்துடனும் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story