ஓபிஎஸ் தாயார் மறைவு: டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல்...!


ஓபிஎஸ் தாயார் மறைவு: டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல்...!
x

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு டிடிவி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22-ந் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார். தாயாரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை வந்தார். இந்நிலையில் பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக தலைவர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சசிகலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தனது தாயாரை இழந்து வாடும் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தாயார் பழனியம்மாள் காலமான செய்தியறிந்து அவரை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டேன். அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

தமிழக முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் திருமதி.பழனியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.தாயை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்தியதை அறிந்து வேதனையடைந்தேன். பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். தாயாரை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கு,உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

Next Story