போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் முகமது ஆதிப் (வயது 31). இவர் ஊட்டி மார்க்கெட்டில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் மார்க்கெட் நுழைவுவாயில் பகுதியில் சாலையில் தனது காரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டார். இதனால் மாரியம்மன் கோவில் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த முகமது ஆதிப், கார் நிறுத்தியது தொடர்பாக போக்குவரத்து போலீஸ்காரர் மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றவே அவர் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் முகமது ஆதிப் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி சிறையில் அடைத்தனர்.