சிறை காவலர்களுக்கு கொலை மிரட்டல்


சிறை காவலர்களுக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய சிறையில் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மத்திய சிறை

ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (வயது 27). இவருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் தொடர்பு இருப்பதாக கூறி சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அதிகாரிகள் ஆசிப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் ஆசிப்பை பார்ப்பதற்காக அவருடைய தந்தை நேற்று முன்தினம் வந்தார். இது குறித்து ஆசிப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே, அவர் தந்தையை சந்திக்க நடந்து சென்ற போது பாதுகாவலுக்கு நின்ற சிறைக்காவலர் தனவேந்திரனின் காலை மிதித்து விட்டதாக தெரிகிறது.

காவலர்களுக்கு கொலை மிரட்டல்

இதையடுத்து தனது தந்தையை சந்தித்துவிட்டு திரும்பி வந்த ஆசிப்பிடம் தனது காலில் மிதித்தது தொடர்பாக காவலர் தனவேந்திரன் கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை மற்றொரு காவலரான ராகுல் தட்டி கேட்டதாக தெரிகி றது. உடனே ஆசிப், அவரிடமும் வாக்குவாதம் செய்து உள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த ஆசிப், உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, என்றும் மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கைதி மீது வழக்கு

இது குறித்து காவலர்கள் 2 பேரும் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் ஆசிப் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகளை கூறி திட்டுதல் உள்பட 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story