தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 சிறுவர்கள் கைது


தூத்துக்குடி அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கமணிநகர். 4-வது தெருவைச் சேர்ந்தவர் அழகர், இவரது மகன் முனியசாமி (வயது 32) கூலி தொழிலாளி. இவர் முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்தையாபுரம் ராஜீவ் நகர்2-வது தெருவை சேர்ந்த 19 வயது சிறுவனும், எம்.சவேரியார்புரத்தை சேர்ந்த 19 வயது சிறுவனும் மது குடிப்பதற்கு முனியசாமியிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு முனியசாமி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் பணத்தை வைத்துக் கொண்டே இல்லை என்று கூறுகின்றாயா என்று கூறியவாறு அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். அதைப் பார்த்து முனியசாமி சப்தம் போட்டு அலறி உள்ளார். அவரது சப்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் அந்த 2 சிறுவர்களையும் கண்டித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் முனியசாமியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த சிறுவர்களையும் கைது செய்தனர்.


Next Story