பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு


தினத்தந்தி 2 Oct 2023 4:30 AM IST (Updated: 2 Oct 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும் ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோர விபத்து

தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60 பேர் தனியார் பஸ் மூலம் கடந்த 28-ந் தேதி கேரள மாநிலம் குருவாயூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் காலை ஊட்டிக்கு வந்தனர். அங்கு தாவரவியல் பூங்காவுக்கு சென்ற அவர்கள், நேற்று முன்தினம் மாலை கோவை மருதமலை வந்துவிட்டு, சொந்த ஊர் திரும்ப முடிவு செய்திருந்தனர்.

இதன்படி மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பிய போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

8 பேர் பலி

இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்த குன்னூர் ேபாலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் கீழ் கடையத்தை சேர்ந்த இளங்கோ (வயது 64) மற்றும் அவரது மகள் கவுசல்யா (29), கடையத்தை சேர்ந்த சண்முகையா மனைவி பேபி கலா (36), விஜயசுப்பிரமணி மகன் நிதின் (15), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பண்டாரம் மனைவி முப்பிடாதி அம்மாள் (67), முருகேசன் (65), கடையத்தை சேர்ந்த முருகன் மனைவி ஜெயா (50), கடையம் கருப்புசாமி மனைவி தங்கம் (40) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த கவுதமி (57), சண்முகத்தாய் (48) ஊட்டி அரசு ஆஸ்பத்திரியிலும், முப்பிடாதி (65), செல்லம்மா (70) கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காயம் அடைந்த பஸ் டிரைவர் முத்துக்குட்டி (65) உள்பட 32 பேர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். 15 பேர் லேசான காயம் அடைந்தனர்.

மேலும் ஒருவர் சாவு

இந்தநிலையில் கேரள மற்றும் நீலகிரி சுற்றுலாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்த கீழ் கடையத்தை சேர்ந்த அன்பழகன் மனைவி பத்மா ராணி (58) என்பவரின் நிலை என்ன என்று தெரியவில்லை. அவர் விபத்து நடந்த இடத்தில் மீட்கப்படாமல் இருந்தாரா? என்பது குறித்து நேற்று காலை தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் பஸ்சின் அடியில் பத்மா ராணி சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

உறவினர்கள் சோகம்

இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு குன்னூர் நகர் முழுவதும் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதேபோல் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

எச்சரிக்கைக்கு செவிசாய்க்காததால் விபத்து

ஊட்டியில் இருந்து சுற்றுலா பஸ்சை மாற்று டிரைவரான கோபால் (32) குன்னூர் வரை ஓட்டி வந்தார். இந்தநிலையில் குன்னூர் அருகே வந்தபோது கிளட்ச் பிளேட்டில் இருந்து வாசனை அதிகமாக வந்தது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் டிரைவரிடம் தெரிவித்து கவனமாக ஓட்டுமாறு எச்சரித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து டிரைவர் முத்துக்குட்டி (65) குன்னூரில் இருந்து பஸ்சை ஓட்டினார். இருப்பினும், கிளட்ச் பிளேட்டில் இருந்து தொடர்ந்து வாசனை வந்துள்ளது. இதுகுறித்து பஸ்சில் பயணம் செய்த செல்லக்கனி என்பவர் கூறியதாவது:-

விபத்து நடப்பதற்கு முந்தைய கொண்டை ஊசி வளைவில் எதிரே வந்த ஒரு வாகனம் மீது சுற்றுலா பஸ் மோதுவது போல் சென்றது. பின்னர் பின்னோக்கி இயக்கப்பட்டு, மீண்டும் சென்றது. இதனால் பிரேக் ஷூ மற்றும் கிளட்ச் பிளேட்டில் இருந்து வாசனை வருகிறது. எனவே, பஸ்சை நிறுத்தி விட்டு செல்லலாம் என்று நானும், சுற்றுலா பயணிகள் பலரும் டிரைவரிடம் கூறினோம். அப்போதே பஸ்சை நிறுத்தி இருந்தால் விபத்தில் இருந்து தப்பி இருக்கலாம். எனக்கு மேல்புறம் இருந்த கண்ணாடி உடைந்து இருந்ததால், அந்த வழியாக நான் மேலே வந்து விட்டேன். நடக்க முடிந்த ஆட்கள் மேலே வந்தனர். நடக்க முடியாத ஆட்கள் உள்ளே சிக்கி உயிரிழந்து விட்டனர். அதேபோல் பஸ் மரத்தில் மோதி நிற்காமல் இருந்தால், உயிர் பலி அதிகரித்து இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story