விளை நிலங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு


விளை நிலங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
x

விளை நிலங்களுக்கு பட்டா வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

பஸ் வசதி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரியலூர் ஒன்றியம், கடுகூர் ஊராட்சி, தலையாரிக் குடிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் க.பொய்யூர் அல்லது பூமுடையான்பட்டி வரை நடந்து சென்று பின்னர் பஸ்சில் ஏறி செல்கின்றனர். இதை தவிர்க்க எங்கள் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது அரியலூரில் இருந்து கடுகூர் வரை செல்லும் தனியார் மினி பஸ் எங்கள் கிராமத்திற்கு வருவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

முன்னாள் படை வீரரின் மனைவி உமா அளித்த மனுவில், நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள மனைகளுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாதை வழியாக சென்று வந்தோம். தற்போது அந்த பாதை மறிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள 70 மனைகளுக்கும் அணுகுசாலை அமைக்க வேண்டும், என்று கூறியிருந்தார். மருந்து வினியோகஸ்தர் ஒருவர் அளித்த மனுவில், உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவசர தேவைக்காக கொள்முதல் செய்த நிலையில், வழங்க வேண்டிய நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

பட்டா வழங்க வேண்டும்

பெரியமணக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் பதித்தால், தேரோட்டம் நடத்தும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேரோடும் வீதியில் குழாய் அமைப்பதை நிறுத்தி வைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். பெரியநாகலூர் ஊராட்சி காட்டுப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட விளை நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று 63 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். மேலும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க உள்ளோம், என்று கூறியிருந்தனர்.

அரியலூர் மாவட்ட உள்ளாட்சித் துறை ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பொதுச்செயலாளர் தண்டபாணி அளித்த மனுவில், அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகள் மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சி ஆகியவற்றில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.307 ஊதியமாக வழங்கப்படும் நிலை உள்ளது. தற்போதைய விலைவாசியில் இது சொற்ப கூலியாகும். எனவே மற்ற மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிக்கும் தினக்கூலி உயர்வினை கணக்கில் கொண்டு அரியலூர் மாவட்ட கலெக்டர் தினக்கூலிக்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story