பழுதடைந்த 20 வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்ற முடிவு


பழுதடைந்த 20 வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்ற முடிவு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் பழுதடைந்த 20 வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சிறப்பு சுருக்க திருத்தம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் 1.1.2024-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 332 வாக்குச்சாவடி மையங்களிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையினை (ஊரக பகுதியில், நகரப்பகுதியில் 1,500) கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளை பிரித்தல், வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ளவை, பழுதடைந்த கட்டிடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பான பணிகள் கடந்த 12-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான தாசில்தார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

20 வாக்குச்சாவடிமையங்கள்

இவ்வாறு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பெரம்பலூர் தொகுதியில் 8 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் தொகுதியில் 12 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் வரைவு பட்டியலை பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான நிறைமதி வெளியிட்டார். மேற்படி வாக்குச்சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் மேற்படி வரைவு அறிக்கையானது பெரம்பலூர் மாவட்ட அரசு வலைதளமான www.perambalur.nic.in-ல் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் வருகிற 30-ந்தேதிக்குள் எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட மேற்கண்ட அலுவலகங்களில் தெரிவித்து கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story