வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த முடிவு


வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த முடிவு
x

விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை மேயர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

தொழில்நகரமான சிவகாசியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட்களை கொண்டு வரும் சரக்கு வாகனங்களும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசு, தீப்பெட்டி அச்சு பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வரும் வாகனங்களும் நிறுத்த போதிய இட வசதி இல்லாத நிலையில் நகரில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் நகரில் பல இடங்களில் செயற்கையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆதலால் உள்ளூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனை தவிர்த்து வெளியூர்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும் என வர்த்தகர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போது சிவகாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் இடம் வாங்கப்பட்டு உலக வங்கி உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு மீன் மார்க்கெட் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு செல்ல இறைச்சி வியாபாரிகள் தயக்கம் காட்டினர்.

இதனால் அந்த மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் பயன்பாடு இன்றி கிடந்தது. இந்த பகுதியில் சமூக விரோத செயல்களும் நடைபெற்றது.

இந்தநிலையில் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த முடிவு செய்தது.இதையடுத்து சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் சங்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த ரவி உள்ளிட்டவர்கள் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். மேயரின் முயற்சிக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story