பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அமைதி திரும்பியது
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகரில் பெட்ரோல் குண்டு வீச்சு, கல் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து கமாண்டோ படையினர் உள்பட 3,500 போலீசார் கோவைக்கு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைந்து கைது செய்தனர். இதனால் தற்போது, மாநகரில் அமைதி திரும்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த வாரம் மத நல்லிணக்க கூட்டம் நடைபெற உள்ளது.
500 பேர் திரும்பினர்
கோவையில் அமைதி திரும்பியதையடுத்து பாதுகாப்பு பணிக்கு வந்த 5 கம்பெனி ஆயுதப்படை போலீசார், கமாண்டோ படையினர் 100 பேர் உள்பட மொத்தம் 500 பேர் திரும்பி அனுப்பப்பட்டனர். மேலும் எஸ்.டி.எப். (அதிரடிப்படையினர்), ஆர்.ஏ.எப். (அதிவிரைவுப்படையினர்) உள்ளிட்டவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
மாநகரில் நடைபெற்ற சம்பவங்களில் கோவைப்புதூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் மட்டும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
9 பேரை காவலில் எடுத்து விசாரணை
கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் யாரும் உள்ளார்களா? என்பது குறித்து அறிய 9 பேரையும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.