கொப்பரை விலை வீழ்ச்சி


கொப்பரை விலை வீழ்ச்சி
x

வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் அரசு மூலம் கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை,

வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் அரசு மூலம் கொள்முதலை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கொள்முதல் மையம்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 10 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள தேங்காய்கள் 100-க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில், உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றப்படுகிறது.

பின்னர் அரசு கொள்முதல் மையம் மற்றும் தனியாரிடம் கொப்பரை உற்பத்தி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி முதல் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டது. அரவை கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

விலை வீழ்ச்சி

கொப்பரை கொள்முதல் கடந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை 1,110 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 27 ஆயிரத்து 945 மூட்டைகளில் கொப்பரை கொள்முதல் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் இஷாக் தலைமையில் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியே 79 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். இந்தநிலையில் அரசாணையின்படி கடந்த 31-ந் தேதி முதல் செஞ்சேரி உள்பட தமிழக்ம முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.

தற்போது காங்கேயம், வெள்ளக்கோவில் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.77 முதல் ரூ.80 வரை மட்டும் கொள்முதல் விலையாக உள்ளது. கொப்பரை கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், கொப்பரை உற்பத்தி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால், விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற கொப்பரை கொள்முதலை தமிழக அரசு உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story