குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்


குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்
x

குளிர்சாதன பெட்டி இல்லாததால் அழுகி வரும் உடல்கள்

தஞ்சாவூர்

பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன பெட்டி இல்லாததால் உடல்கள் அழுகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காமராஜர் அரசு ஆஸ்பத்திரி

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ரெட்டவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், கடலோர காவல் படை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, தற்கொலை, விபத்து ஆகியவற்றில் மீட்கப்படும் உடல்கள் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட உடல்கள் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

உடல்கள் அழுகி துர்நாற்றம்

இந்த பிரேத பரிசோதனை கூடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இ்ல்லை. மேலும் பிரேத பரிசோதனை செய்ய கொண்டு வரும் உடல்களை வைக்க குளிர்சாதனை பெட்டி இல்லை. இதனால் கொண்டு வரப்பட்டுள்ள உடல்கள் அழுகி வீணாகி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. மேலும் பெருச்சாளிகள் உடலை கடித்து குதறுகின்றன. இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களை குடியிருக்க முடியாத நிலையில் நோய் தொற்று ஏற்படும் அவலம் உள்ளது.

குளிர்சாதன பெட்டி

எனவே மாவட்ட நிர்வாகம் பேராவூரணி அரசு காமராஜர் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் உடல்களை பாதுகாக்கும் வகையில் குளிர்சாதன பெட்டி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் போதிய டாக்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story