லட்சக்கணக்கான வண்ணப்பூக்களால் அலங்காரம்: ஊட்டி மலர் கண்காட்சியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

லட்சக்கணக்கான வண்ணப்பூக்களால் அமைக்கப்பட்டுள்ள ஊட்டி மலர்க்கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மலர் அரங்குகளை பார்வையிட்டார். பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.
ஊட்டி
லட்சக்கணக்கான வண்ணப்பூக்களால் அமைக்கப்பட்டுள்ள ஊட்டி மலர்க்கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மலர் அரங்குகளை பார்வையிட்டார். பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியின் வாத்தியக்குழுவினர் பேண்டு வாத்தியம் இசைத்து வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ண மலர்களையும், லட்சக்கணக்கான வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களையும், பொருட்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கண்டு ரசித்தார். மேலும் மலர் அலங்காரங்கள் முன்பு தனது மனைவியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கண்காட்சியை கண்டு ரசித்தார்
அப்போது மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்த 124-வது மலர் கண்காட்சி, ஊட்டி 200 என்ற வாசகம் மற்றும் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாதிரி தோற்றத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.
தொடர்ந்து ஹெலிகோனியா மலர் அலங்காரங்களையும், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப் மலர் செடிகளையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், காட்டெருமை உள்ளிட்ட பிற அலங்காரங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
மீண்டும் மஞ்சப்பை
சுற்றுச்சூழல் துறையின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக "மீண்டும் மஞ்சப்பை" பயன்பாடு குறித்து அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார் அரங்குகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை துறையின் காட்சி திடல்களை பார்வையிட்டார்.
நேற்று உலக தேனீ தினம் என்பதால், அங்கு அமைக்கப்பட்டு இருந்த தேனீ அரங்கை பார்வையிட்டதுடன், தேனீ பெட்டிகளை வழங்கி, தேனீ வளர்ப்பு முறைகளையும் கேட்டறிந்தார்.
பழங்குடியினர் நடனம்
பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் படுகர், தோடர் இன பழங்குடியினரின் குழு நடனம் நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்து தனது மனைவியுடன் கண்டு ரசித்தார்.
மலர்க்கண்காட்சி நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நீலகிரி ஆ.ராசா எம்.பி., ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ., நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ரா. பிருந்தாதேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
24-ந் தேதி வரை நடக்கிறது
ஊட்டி மலர் கண்காட்சி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த 5 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
சுற்றுலா பயணிகள் காலை 7 மணி முதல் மலை 7 மணி வரை மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.