கட்டுமான நிறுவனத்தின் சேவை குறைபாடு:- வாடிக்கையாளரின் வாரிசுகளுக்கு வீடு, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
தனியார் கட்டுமான நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளரின் வாரிசுகளுக்கு வீடு வழங்குவதுடன், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
தனியார் நிறுவனம்
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் மனோகரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்காக ராஜேஸ்வரி இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.6 லட்சத்து 44 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் இந்த நிறுவனத்துடன் வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தை செய்து தவணை முறையில் ரூ.22 லட்சம் செலுத்தியுள்ளார்.
ஒப்பந்தப்படி 2014-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை தனியார் நிறுவனம் மனோகரனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி வீட்டை கட்டி கொடுக்காமல் கூடுதலாக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தினால் தான் வீட்டை கட்டி முடிக்க முடியும் என்று தனியார் நிறுவனத்தினர் மனோகரனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தொகையை செலுத்த தவறினால் வாரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சேவை குறைபாடு
இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை தாக்கல் செய்த மனோகரன் திடீரென இறந்து விட்ட நிலையில் அவரது வாரிசுகளான மனைவி சுதா (வயது 45), அவரது மகள் தனுஸ்ரீ (13), மகன் அபிஷேக் (11) ஆகியோர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு முழு தொகையையும் பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை விட கூடுதலாக பணம் கொடுத்தால் தான் வீட்டை தரமுடியும் என்று கட்டுமான நிறுவனம் வற்புறுத்தியது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும், வீட்டை வழங்க 8 ஆண்டுகள் காலதாமதம் செய்தது சேவை குறைபாடு என்றும் தீர்ப்பளித்தனர்.
இழப்பீடு வழங்க உத்தரவு
எனவே சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம், இறந்து போனவரின் வாரிசுகளிடம் கட்டப்பட்ட வீட்டை 4 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனம் செய்த நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக சுதா மற்றும் அவரது குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.