சம்பளம் வழங்குவதில் தாமதம்முதுமலையில் ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
சம்பளம் வழங்குவதில் தாமதமானதால் முதுமலையில் ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சூழல் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகம், விடுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை என புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக ஆதிவாசி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வனத்துறையினரிடம் முறையிட்டனர். அப்போது அவர்கள், உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள உணவகத்தை மூடினர். இதனிடையே கர்நாடகம், கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் உணவகம் மூடி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து மசினகுடிக்கு சென்றனர். இது குறித்து ஆதிவாசி ஊழியர்கள் கூறும்போது, மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றனர். இதைத்தொடர்ந்து மாலை அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வேலைக்கு திரும்பினர். மேலும் உணவகமும் திறக்கப்பட்டது.