நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த கோரிக்கை


நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த கோரிக்கை
x

நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பிரபு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

மாநில துணைத்தலைவர் மகேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் பாபு, பிச்சை, பழனிசாமி, கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வனக்காப்பாளர், வனக்காவலர்களின் ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும். அனைத்து நிலைகளிலும் 30 சதவீதம் புதிய பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். வனச்சீருடை பணியாளர்களுக்கு சீருடை, காலணி, டார்ச்லைட் உள்ளிட்டவைகளுக்கு ஒருங்கிணைந்த பணமாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். முக்கிய நகரங்களில் மகளிர் பணியாளர்களை மட்டுமே கொண்ட நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி மூப்பு கொண்ட அனைத்து வேட்டை தடுப்பு காவலர்களை கால தாமதமின்றி வனக்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story