ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை
பணியிடம் மாற்றம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி தேர்வை புறக்கணித்து மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் வேளாண்மை ஆசிரியர் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியா் ஆகிய இருவரை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களை மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் அந்த பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று தேர்வை புறக்கணித்து விட்டு வந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், தங்கள் பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவர்களை பணியிடம் மாற்றம் செய்து விட்டதாகவும், 15 ஆண்டுகளாக தங்கள் பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்களும் மீண்டும் தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும். இல்லை எனில் தங்களை அவர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும். உண்மையில் பள்ளியில் முறைகேடு செய்யும் 3 ஆசிரியர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.