குடும்ப அட்டைதாரர்களுக்கு காய்கறிகளை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும்கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே அவற்றை விடும் நிலை ஏற்பட்டது. இப்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் காய்கறிகளை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் காய்கறிகளை சராசரி விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.