ஜனநாயக போராட்டத்தை அடக்க முடியாது: போலீசார் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


ஜனநாயக போராட்டத்தை அடக்க முடியாது:  போலீசார் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:45 PM GMT)
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஜனநாயக போராட்டத்தை அடக்க முடியாது. போலீசார் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பொள்ளாச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

உண்ணாவிரத போராட்டம்

சொத்து வரி உயர்வு, பால், மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், தேங்காய், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி, பொள்ளாச்சி பஸ் நிலையத்தை சி.டி.சி. மேட்டிற்கு இடமாற்றம் செய்ய கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால் பொள்ளாச்சி நகராட்சியில் தான் வீட்டு வரி, குடிநீர், குப்பை வரி மிக, மிக அதிகம். இதுகுறித்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரிடம் தெரிவித்த பிறகும், மேலும் 100 சதவீதம் வீட்டு வரி உயர்த்தியதால் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு வாடகை பன்மடங்கு உயர்ந்து உள்ளது. பொள்ளாச்சி பஸ் நிலையத்தை குறுகிய இடம் கொண்ட சி.டி.சி. மேட்டிற்கு இடமாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் தி.மு.க. அரசு மீது உள்ளது.

போலீசார் மிரட்டல்

ஜனநாயக ரீதியான போராட்டத்தை போலீசாரை கொண்டு அடக்க முடியாது. போலீசாரின் மிரட்டலுக்கு அச்சப்பட மாட்டோம். கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்க நிதி ஒதுக்கி டெண்டர் விட்டு பணிகள் நடைபெறும் போது நிறுத்தி விட்டனர். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ரூ.25-க்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.7-க்கு தான் விற்பனை ஆகிறது. உரிப்பு கூலி, சுமை கூலி போக விவசாயிக்கு ரூ.4 தான் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு கடந்த 3 நாட்களாக பொள்ளாச்சி போலீசார் பேனர் வைக்கவோ, கொடி கட்டவோ, பந்தல் அமைக்க கூடாது என்று கடுமையான நெருக்கடி கொடுத்தனர். நாட்டில் இல்லாத கொடுமையை பொள்ளாச்சி போலீஸ் செய்து கொண்டிருக்கிறது. உண்ணாவிரத போராட்டம் நடத்தவே போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. போலீசாரின் எதிர்ப்புக்கு பிறகும் பல்லாயிரக்கணக்கானோர் அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஞ்ச மாட்டோம்

முன்னதாக கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். இதை தொடர்ந்து மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.வுக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது எல்லாம் வரி உயர்த்தப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வரி உயர்த்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்திருந்தால் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரைக்கும் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தி.மு.க.வினர் போலீசார் உதவியோடு கற்கள், மணலை கடத்துகின்றனர். இளைஞர் சமுதாயம் மோசமான நிலைக்கு சென்று விட்டது. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், போலீசார் எத்தனை வழக்கு போட்டாலும் அஞ்ச மாட்டோம். அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். அதன்பிறகு உறுதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதில் எம்.எல்.ஏ.க்கள் அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கோவை தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவருமான வெங்கடாச்சலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துகருப்பண்ணசாமி, கஸ்தூரிவாசு, நிர்வாகிகள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், வால்பாறை அமீது, இளஞ்செழியன், கார்த்திக் அப்புசாமி, ஜி.கே.சுந்தரம், மயில்கணேசன், ரகுபதி, விஜயகுமார், ஓ.கே.முருகன், ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகராஜ், மார்ட்டின், ராஜ்கபூர், ஈஸ்வரன், நரிமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்திற்கு பேனர், கொடி கட்ட கூடாது என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Next Story