பலப்பட்டரை மாரியம்மன் கோவில் விரிவாக்க பகுதி இடித்து அகற்றம்


பலப்பட்டரை மாரியம்மன் கோவில் விரிவாக்க பகுதி இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:30 PM GMT (Updated: 2023-01-25T01:00:31+05:30)
நாமக்கல்

பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலின் ஒருபகுதி நகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டது.

பலப்பட்டரை மாரியம்மன் கோவில்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரதான சாலையின் ஓரமாக பழமை வாய்ந்த பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி 3 மாத காலத்திற்கு தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்களின் வசதிக்காக இக்கோவிலின் வடக்கு பகுதியில் இருந்து வந்த, பொதுப்பாதையை ஆக்கிரமித்து கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இடிக்க உத்தரவு

இதையொட்டி நாமக்கல்லை சேர்ந்த பாப்பாயி என்பவர், பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொது நலவழக்கு தொடர்ந்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை, 2 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கப்படவில்லை. எனவே அவரது குடும்பத்தை சேர்ந்த புனிதவதி, கலாவதி ஆகியோர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் அகற்ற உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அதன்படி நேற்று நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில் நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், ஆய்வாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் குணசீலன், சுகாதார அலுவலர் திருமூர்த்தி கொண்ட குழுவினர் கோவிலின் ஒருபகுதி மற்றும் ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி அப்புறப்படுத்தினர்.

இதையொட்டி நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 13 அடி அகலம் மற்றும் 80 அடி நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட பலப்பட்டரை மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி, இடிக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story