ஈரோட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்


ஈரோட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்
x

ஈரோட்டில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்

ஈரோடு

ஈரோடு இடையன்காட்டு வலசு சின்னமுத்து மெயின் வீதியில் பத்மபிரியா என்பவர் 1,195 சதுர அடியில் மாடி வீடு கட்டி வருகிறார். இதற்காக அவர் மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளார். இதற்கிடையில் பத்மபிரியா வீட்டின் சுற்றுச்சுவர் 8 அடி உயரத்துக்கு கட்டுவதற்கு பதிலாக விதிகளை மீறி 20 அடி வரை கட்டியிருப்பதாக புகார் வந்தது. அதன்பேரில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிகளை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனால் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருக்கும் சுற்றுச்சுவரை இடித்து அகற்றக்கோரி மாநகராட்சி சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்படவில்லை.

இதனால் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில், நேற்று காலை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமையில் இளநிலை செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள வீட்டின் சுற்றுச்சுவரை போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர். அப்போது, வீட்டின் உரிமையாளரான பத்மபிரியா அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரே கட்டிட தொழிலாளர்கள் மூலம் விதிகளை மீறி கட்டப்பட்ட மீதமுள்ள சுற்றுச்சுவரையும் இடித்து அகற்றினார்.


Next Story