'ஆபீசர்ஸ் கிளப்' இடிப்பு
‘ஆபீசர்ஸ் கிளப்’ இடிக்கப்பட்டது.
துறையூர்:
துறையூர் தாசில்தார் அலுவலகத்தின் பின்புறம் கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அப்போதைய அதிகாரிகள் பணி முடித்து ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமானது, 1938-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அரசு அதிகாரிகளின் மனமகிழ் மன்றமாக செயல்பட்ட இந்த அலுவலகம் பின்னர் ஆபீசர்ஸ் ரெக்ரியேஷன் கிளப் என்ற பெயரில் இருந்தது. இந்நிலையில் அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடம் அரசு வருவாய்த்துறையின் கீழ் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவின்பேரில், துறையூர் தாசில்தார் புஷ்பராணி தலைமையில், நகராட்சி ஆணையர் முருகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கட்டிடம் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் இடிப்பதற்கு முன்பு கட்டிடத்தின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வெளியில் எடுத்து வைக்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த கட்டிடம் திடீரென இடிக்கப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.