ஆவடத்தூர் ஊராட்சியில் தரமாக பாலம் கட்டக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆவடத்தூர் ஊராட்சியில் தரமாக பாலம் கட்டக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2023 1:22 AM IST (Updated: 9 July 2023 4:36 PM IST)
t-max-icont-min-icon

ஆவடத்தூர் ஊராட்சியில் தரமாக பாலம் கட்டக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்

மேச்சேரி

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் கிராம ஊராட்சியில் 1-வது வார்டு வத்த முனியன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் வசிக்கும் மக்களில் தறிக்கூடங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், சவுரியூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அந்த பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் ஓடையை தாண்டி செல்ல வேண்டி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் கழிவு நீர் ஓடையின் இருபுறமும் கான்கிரீட் பாலம் அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஓடையின் வழியாக பாலம் கட்டுவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்றது. ஆனால் அந்த பாலம் கட்டும் பணி தரமாக நடைபெறவில்லை எனக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தரமாக பாலம் கட்ட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பு அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வத்த முனியன் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நங்கவள்ளி ஒன்றிய மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கவிதா தலைமை தாங்கினார். மாதர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் சகுந்தலா, சண்முக பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாத்தி கலந்து கொண்டு பேசினார். கட்சி நிர்வாகிகள் தானம்மாள், கண்ணம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story