ஓசூரில்அகத்தியர் ஆன்மிக சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓசூர்:
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்றது. முன்னதாக 27-ந் தேதி தமிழ் தேசிய இயக்கத்தினர் பிரச்சினை செய்தது தொடர்பாக போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி நேற்று அகத்தியர் ஆன்மிக சங்கம் சார்பில் ஓசூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிறுவனர் முரளி மோகன் தலைமை தாங்கினார்.
சேலம் மண்டல செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநில தலைவர் நற்பவி சுரேஷ், புதுச்சேரி மாநில தலைவர் சொக்கலிங்கம், மாநில மகளிர் குழு செயலாளர் சேலம் ரேணுகா, மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ராஜகோபால் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ஆன்மிகவாதிகள், சாமியார்கள் கலந்து கொண்டு மேடையில் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிவ மந்திரங்கள் முழங்கியும், சங்கு ஊதி சங்கநாதம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.