கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் 2-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகிணறு பகுதியில் கடந்த 23-ந் தேதி புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பாப்பாத்தி (வயது55) என்கிற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக நாரைக்கிணறு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜிக்கு உதவி கலெக்டர் மஞ்சுளா 17-பி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதனை தங்கராஜ் இதுவரை பெறவில்லை. இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலருக்கு 17-பி நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
இதையொட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் லட்சுமி நரசிம்மன், பொருளாளர் ராஜ்குமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.